நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்று, தற்போது வேளாண் துறையையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் திருத்தங்களை கொண்டு வந்து அதற்கான மசோதாக்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது பாஜக அரசு.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து பெரும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வேளாண் மசோதா குறித்த பாதகங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள் எடுத்த போதும் அதனை கருத்தில் கொள்ளாமல் மாநிலங்களவையிலும் பாஜக அரசு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓபிரைய்ன் மோசடி செய்தே மோடி அரசு வேளாண் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது என கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தின் அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை பாஜக உடைத்தெறிந்து வருகிறது.
வரலாற்றில் இது ஒரு மோசமான நாள். பாஜக அரசின் செயல்பாடுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத மோசமான ஒன்று. மாநிலங்களவை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தி அவை செயல்பாடுகளை யாரும் பார்க்காதவாறு செய்திருக்கிறார்கள்.
ராஜ்யசபா தொலைக்காட்சியையே பாஜக அரசு தணிக்கை செய்திருக்கிறது. தவறான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. அதை முதலில் பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.