இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்த ஆய்விற்காக மத்திய பா.ஜ.க அரசு 16 உறுப்பினர்கள் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் இந்தியாவின் தொன்மையும், வரலாறும் நிறைந்துள்ள தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முழுவதும் வட இந்தியர்களை மட்டுமே கொண்ட இந்த 16 பேர் கொண்ட ஆய்வுக்குழுவில் பெண்களுக்கும் இடம் வழங்கப்படவில்லை; சிறுபான்மையினருக்கும் ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை.
இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மாணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத்துறை ஆகியவற்றின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோரை இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பிரயத்தனப்படும் பா.ஜ.க அரசு, தமிழ் உள்ளிட்ட உலகின் தொன்மையான மொழிகளை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க அரசின் இத்தகைய அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க எம்.பி., கனிமொழி “இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், செம்மொழித் தகுதி பெற்ற சான்றோர்கள் எனப் பலரையும் இக்குழுவில் இணைத்திட வேண்டும். நாடு முழுக்க உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றால்தான் ஆய்வின் முடிவு முறையாகவும், முழுமையாகவும் இருக்கும்.
ஆனால், மத்திய அரசு நியமித்துள்ள இக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. மேற்கு வங்கம், கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.
ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே கொள்கை என வெளிப்படையாகவே வேத கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.