கோவிட் 19 பெருந்தொற்றை சமாளிக்க முடியாத மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ஆங்கிலத்தில் #SpeakUpForJobs என்ற ஹேஷ்டேகின் கீழ் அந்த பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
மிகப்பெரிய அளவில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மையே இந்த பிரச்சாரத்தின் அடித்தளமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தை மிகத் தவறாக மோடி அரசு கையாண்டதனால் விளைந்ததே இந்த பெரு வேலைவாய்ப்பின்மை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தியைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அந்த ஹேஷ்டேகின் கீழ் பதிவுகளை இட்டுவருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உங்கள் நாட்டின் எதிர்காலத்துக்காகப் பேசுங்கள் என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி “மோடி அரசின் திட்டங்கள் பல கோடி பேர் வேலை இழப்பதற்குக் காரணமாக அமைந்தது. வரலாறு காணாத வகையில் ஜிடிபி குறைந்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கியுள்ளது. இந்த அரசை அவர்களின் குரலுக்குச் செவி மடுக்க வைப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் “ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்தியாவிலும் சரி, அமல்படுத்தப்படாத இந்தியாவாக இருந்தாலும் சரி பல லட்சம் இந்தியர்கள் தங்கள் பணியைத் தினந்தோறும் இழந்து வருகிறார்கள். இவை அனைத்தையும் செய்யும் பா.ஜ.க அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. இந்த தேசம் அமைதியாக இருக்காது. இந்த தேசம் தன்னுடைய பணிகளுக்காகப் பேசும்.” எனப் பதிவிடப்பட்டுள்ளது.