கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட பி.எம் கேர்ஸ் எனும் பெயரிலான நிதியம் பா.ஜ.க அரசால் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பவர்கள் அதில் பங்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பேரிடர் நிவாரணங்களுக்குகென்று பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது புதிதாக பி.எம் கேர்ஸ் எதற்கு என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தன.
பி.எம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் குற்றம்சாட்டி, பி.எம் கேர்ஸ் நிதியை பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், பி.எம்.கேர்ஸ் அறக்கட்டளை குறித்த தணிக்கை அறிக்கை, பி.எம் கேர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எம்.கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்ட முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி பணம் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. ஆனால் யாரெல்லாம் நன்கொடை அளித்தார்கள் என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்,
“பி.எம். கேர்ஸ் நிதிக்கு மார்ச் 26 முதல் 31 வரையிலான 5 நாளில் மட்டும் 3,076 கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெருந்தன்மையுடைய இத்தகைய நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிடாமல் இருப்பது ஏன்?
ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. பி.எம் கேர்ஸ் நிதிக்கு மட்டும் இந்த கடமையில் இருந்து ஏன் விலக்கு?
நன்கொடை பெற்றவர்களும், பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் காப்பாளர்களும் யார் என தெரிந்திருக்கும் போது, நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிட காப்பாளர்கள் அஞ்சுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.