பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வழங்கியதில் சீன நிறுவனங்களும் உள்ளனவா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பி.எம்.கேர்ஸ் நிதியைத் தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக்கோரித் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி என்பது தன்னார்வ அறக்கட்டளைகளிலிருந்து பெறப்பட்டது என்றும், அவை முழுக்க முழுக்க வித்தியாசமானவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “உச்சநீதிமன்றம் பி.எம் கேர்ஸ் நிவாரண நிதியின் சட்ட உரிமை மற்றும் சட்டரீதியாக பதிலளிக்கவேண்டிய பொறுப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி உத்தரவு பிறப்பித்தது. அந்த தீர்ப்பே இறுதியானது என்றாலும் இது அறிவுசார்ந்த தளத்தில் நீண்ட நாளைய விவாதமாக இருக்கும்.” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும். பி.எம் கேர்ஸ் நிதியின் வெளிப்படைத்தன்மை, மேலாண்மை, விவரங்களை வெளிப்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் “மார்ச் 2020-ல் முதல் ஐந்து நாட்கள் 3076 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியவர்கள் யார்? அதில் சீன நிறுவனங்களும் உள்ளனவா? ஏப்ரல் 1,2020 அன்று வரை எவ்வளவு பணம் வந்தது மற்றும் யார் எல்லாம் நன்கொடை வழங்கினார்கள்?” எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
மேலும் இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றால் இந்த முக்கியமான கேள்விகளுக்கு எல்லாம் யார் பதில் அளிப்பார்கள் எனவும் அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
அவசரக் காலத்துக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி கடந்த மார்ச் 28-ம் தேதி எந்த விதமான பேரிடர்களையும் சந்திப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் தொடங்கப்பட்டது. அதனுடைய அதிகாரப்பூர்வ தலைவர் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.