காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் எனப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் எல்லையில் சீன இராணுவம் மீண்டும் இந்திய இராணுவத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்கு மத்திய அரசு கடவுளின் மீது பழி சுமத்துவதாகக் கருத்து தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று ராகுல் காந்தி மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியா மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் உழல்கிறது. வரலாறு காணாத ஜி.டி.பி பின்னடைவு – 23.9%, 45 வருடங்களில் இல்லாத வேலைவாய்ப்பின்மை, 12 கோடி வேலைகள் இழப்பு, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்காதிருத்தல், உலக அளவில் அதிகபட்ச கோவிட் 19 தினசரி கேஸ்கள் மற்றும் மரணங்கள் மற்றும் நம் எல்லையில் அதிகரிக்கும் நெருக்கடி.” என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அரசி ஜிடிபி 2020/21 ஆண்டுக்கான முதல் காலாண்டு தரவுகளை வெளியிட்டது. அதன் படி ஜி.டி.பி 23.9 சதவீதம் குறைந்துள்ளது. 40 ஆண்டுகளில் இவ்வளவு மோசமாக ஜி.டி.பி குறைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.