சாலைகளில் நெடும்பயணம் செல்ல பிரியப்படுபவர்களுக்கு வாழ்க்கையின் மிகச் சிறந்த பேருந்து நெடும்பயண திட்டம் ஒன்றை அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த பேருந்து இந்தியாவிலிருந்து கிளம்பி லண்டன் செல்ல உள்ளது.
இதுவரை வரலாற்றில் இதுபோன்ற பேருந்து பயணங்கள் நிகழ்ந்ததில்லை. முதன்முறையாக டெல்லியிலிருந்து லண்டன் வரை பேருந்திலேயே இந்த பயணம் நிகழ இருக்கிறது. இச்சேவையை 2021-ம் ஆண்டிலிருந்து தொடங்க இருப்பதாக அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்பயணத்தில் பங்குபெறும் பயணிகள் மொத்தம் 18 நாடுகளைக் கடந்து 20,000 கிமீ பயணம் செய்வார்கள். இப்பயணம் 70 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயணம் ஒரு உயர்ரக லக்ஸுரி பேருந்தில் நடைபெற இருக்கிறது.
மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, லித்துவேனியா, லத்திவா, போலாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக இந்த பேருந்து பிரிட்டன் சென்றடைய இருக்கிறது.
இந்த நெடும்பயணம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் பயணிகள் இந்தியா, மியான்மார், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணப்படுவார்கள். இரண்டாம் பாகத்தில் சீனாவின் சிசுவான், ஷின் ஜியாங் மாகாணங்களில் பயணப்படுவார்கள்.
இந்த பாகத்தில் சீன பெருஞ்சுவர், பட்டு சாலை, கோபி பாலைவனம் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கூட்டிச்செல்லப்படுவார்கள். அதன் பின் அடுத்த பாகத்தில் மத்திய ஆசியாவின் கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணப்படுவார்கள்.
இறுதி பாகத்தில் ஐரோப்பிய நாடுகளான லத்திவியா, போலந்து, லித்துவேனியா, செக் குடியரசு, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்குப் பயணப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடும்பயணத்துக்கான முன்பதிவு தொடங்கி விட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 20 பயணிகள் பயணம் செய்யும் வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு தலா 15 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.