இந்தியா

பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் : மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் : மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த 14-ம் தேதி அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வில், பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசம் அளித்திருந்தனர். ஆனால், 24-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் இந்த வழக்கு வந்தபோது, மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த அறிக்கையில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் நேர்மையற்ற முறையில் கேட்கும் மன்னிப்பு என் மனசாட்சியையும், புனிதமாகக் கருதும் நீதித்துறையையும் அவமதிப்பது போலாகும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பிரசாந்த் பூஷன் வழக்கில் அவரைத் தண்டிப்பதா, வாபஸ் பெறுவதா என திகைத்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அறிவித்தது.

அந்தத் தீர்ப்பில் “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் மறுக்கப்படாது. ஆனால், அதே நேரத்தில் மற்றவர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.

வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதத்தை அவர் நீதிமன்றப் பதிவாளரிடம் செலுத்தத் தவறினால், அவருக்கு 3 மாதம் சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்படும்” என உத்தரவிட்டனர்.

இதனையடுத்து பிரசாந்த் பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான், பிரசாந்த் பூஷன் சார்பில் ஒரு ரூபாயை அபராதமாகச் செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories