கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. ஊரடங்கால் மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை வேறு தொடர்ந்து அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.
ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிலையில் மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.00 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய நிர்ணயத்தை விட 9 பைசா அதிகரித்துள்ளது. இது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக ஏப்ரலில் ஒரு பேரல் 20 டாலருக்கும் கீழ் சென்றபோது, இதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், சர்வதேச சந்தையைில் கச்சா எண்ணெய் விலை பேரல் 40 டாலரை தாண்டியதை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ10, டீசலுக்கு ரூ13 என உயர்த்தியது. இதுபோல், மாநில அரசுகளும் விலையை உயர்த்தின. இப்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலையை உயர்த்தி வருவது ஊரடங்கு சமயத்தில் வருமானம் இன்றி தவித்து வரும் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.