இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாடுமுழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வை மோடி அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும் இதற்காக தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பை உருவாக்கி, நீட் தேர்வுகளை நடத்துகிறது.
கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த மே 3ம் தேதி நீட் தேர்வு நடத்த திட்டமிருந்த அரசு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தேர்வை ரத்து செய்யாமல், செப்டம்பர் 13ம் தேதியும், அதேபோல் ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் மோடி அரசுக்கு எதிராக, நாடு முழுவதிலுமிருந்து 11 மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி தீர்ப்பளித்து.
இந்நிலையில், நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி தற்போதுவரை பதில் அளிக்காத நிலையில், கொதிந்தெழுந்த மாணவர்கள் அரசு தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்து ட்விட்டரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#PostponeNEET_JEE, #PostponeJEE_NEETinCOVID மற்றும் #modiji_postponejeeneet உள்ளிட்ட ஹாஷ்டேக்களின் கீழ் ட்விட்டரில் பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை டேக் செய்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கிரேட்டா துன்பெர்க் JEE, NEET தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கிரேட்டா துன்பெர்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றுநோய் காலத்திலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்திய மாணவர்களை தேர்வு எழுத வலியுறுத்துவது நியாயமற்றது. JEE, NEET தேர்வுகளை ஒத்திவைக்க விடுக்கும் அழைப்புக்குத் துணை நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக கிரேட்டா துன்பெர்க் பேசியிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.