மத்திய அரசு நாட்டில் உள்ள ‘மாணவர்களின் மனசாட்சியின் குரலை’ காது கொடுத்துக் கேட்கவேண்டும் எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐஐடி மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளான ஜேஇஇ(JEE) மற்றும் நீட்(NEET) உள்ளிட்டவை கண்டிப்பாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை மனதில் கொண்டு இந்த தேர்வுகளை மத்திய அரசு தள்ளி வைக்கவேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் மக்களுடன் உரையாடும் ‘மனசாட்சியின் குரல்’ (மான் கி பாத்) நிகழ்ச்சியை விமர்சிக்கும் வகையில், மாணவர்களின் மனசாட்சியின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும் என இந்த விஷயத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இந்திய அரசாங்கம் மாணவர்களின் மனசாட்சியின் குரலைக் கவனித்து நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அளிக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இரு நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவது குறித்த மத்திய அரசின் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் ராகுல் காந்தி இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்த இரு நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகிறது. தேர்வுகளைத் தள்ளிப் போடுவதன் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நாம் ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒருமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஇஇ நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரையிலும், நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.