இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் மீனவர் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழில் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், ஏற்கெனவே வரைவு அறிக்கைக்கு பிற உயர்நீதிமன்றங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.