தாய் தந்தையர் உயிருடன் இல்லாத நிலையில், புதிதாக பாடப்புத்தகங்கள் வாங்க போதிய பணம் இல்லாத சூழலில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள ஸ்மார்ட் போன் வாங்கமுடியாத நிலையில், காஷ்மீர் மாநில 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பத்தாவது இடம் பெற்றிருக்கிறார் ஐஜஸ் அஹமது மிர்.
பல்வேறு சிரமங்களை புறந்தள்ளி வென்று, ஸ்ரீநகரில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு காஷ்மீர் பகுதியான ட்ரல் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லூரியில் பட்டப் படிப்புக்காக நுழைந்துவிட்டார் பதினேழு வயதான மிர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. மீண்டும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட வகுப்புகள் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் ஆரம்பித்த 3 வாரத்திற்குள்ளேயே மீண்டும் மூடப்பட்டது.
இந்த கல்வி ஆண்டைப் பொறுத்தவரை காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் குறைவான வேலைநாட்களே பள்ளிகளும் கல்லூரிகளும் மொத்தமாக இயங்கியுள்ளன என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மிர் கூறுகையில், “பள்ளிக்குச் செல்லமுடியாத காரணத்தால் பாடங்கள் நடத்தப்படவில்லை. ஆசிரியர்களை சந்தித்து சந்தேகம் கேட்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு. மேலும் இன்டர்நெட் வசதிகளும் முடக்கப்பட்டன. எனக்கு முன்னாள் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்காகவும் பள்ளி ஆசிரியர்களுக்காகவும் சாலையில் நின்று அவர்கள் கண்ணில் தென்படும் வரை காத்திருந்து அவர்களிடம் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தினை கேட்டு விளங்கிக் கொள்வேன். என் பள்ளி ஆசிரியர் ஒருவர் குறிப்புகளை தந்து பேருதவி செய்திருக்கிறார். அதுவே நான் நல்ல மதிப்பெண் பெற உதவியது” என புன்னகை ததும்ப நன்றியுரைக்கிறார்.
மேலும், இந்திய நிர்வாக ஆட்சிப் பணியில் சேர விரும்பும் மிர்ருக்கு, பிப்ரவரி மாதத்திலேயே கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. இருந்தும், கடந்த 5 மாதங்களாக கொரோனாவால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தப்படுகிறார் தாய் தந்தையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ஐஜஸ் அஹமது மிர்.
வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கொய்ல் முக்கம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி நஸ்ரினா பலால். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் நஸ்ரினா பலால்.
கடந்த ஆகஸ்ட் மாதம்தொட்டே பள்ளிக்கும் அவருக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அவர் தன் புத்தகங்களையும், கால்குலேட்டரையும் நம்பியே இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளானார். அவர் வீட்டில் தொலைக்காட்சி ரேடியோ போன்ற இன்னபிறவும் இல்லை. நஸ்ரினாவின் வீட்டில் ஒரே ஒரு தொலைபேசி மட்டுமே உள்ளது. அதுவும் ஸ்மார்ட் போன் அல்ல. இணையவழி வகுப்புகளுக்கு சாத்தியமற்ற கூறுகளே காஷ்மீரத்தில் நிரம்பி இருக்கின்றன.
தெளவிபா பிந்தி ஜவைத், ஸ்ரீநகரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி. அங்கு நிலவிய அசாதாரண சூழல் காரணமாக தனது தாய் வீட்டிற்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. அங்கு அவரது தாத்தாவும், மாமாவுமே தௌவிபாவுக்கு பாடங்களை சொல்லி தந்திருக்கிறார்கள்.
கொடிய கொரோனாவும் காஷ்மீரத்தின் சிறப்பு அந்தஸ்து பறிப்பும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் முகமே கிட்டத்தட்ட மறக்குமளவிற்கு செய்துவிட்டது என்கிறார் தனது மழலை மாறாத மொழியில் தெளவிபா.
நத்தை வேகத்தில் ஊறும் இணையத்தால், இணையவழியில் நடக்கும் வகுப்புகள் சோதனைக்குள்ளாக்கவதாக கூறும் தெளவிபா அதனால் ஆசிரியர் கூறும் முக்கியமான தகவல்கள் கிடைப்பதில் குறை ஏற்படுகிறது என்கிறார். காஷ்மீர் 2ஜி இணையம் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களின் நேரத்தையும் விரையம் செய்து கொண்டிருக்கிறது.
தனது ஆறாம் வகுப்பிலேயே நாவல் எழுதியவர் தெளவிபா. காஷ்மீரில் ஏற்பட்ட அலைக்கழிப்பு நிலை, முறையான கல்வி பெறமுடியாமை போன்றவை எல்லாம் சேர்ந்து தௌவிபாவின் மன உறுதியை குலைக்கப்பார்க்கிறது. அனைத்து மாணவர்களும் மோசமான மனநிலை கொண்ட சூழலில் சிக்குண்டு மன ஆரோக்கியமற்ற நிலையிலேயே இருக்கின்றனர்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க ஆளும் மத்திய பா.ஜ.க அரசோ கோவிலுக்கு அடிக்கல் நாட்டி பெருமையடிக்கவும், அவசர அவசரமாக இடஒதுக்கீடுகளை சீர்குலைக்கவுமே நேரம் ஒதுக்கி மும்முரம் காட்டுகிறது.
மக்களின் வரிப்பணத்தில் கோட்டை கொத்தளங்களோடு இயங்கும் அரசு, மக்களுக்காக எதையும் செய்யாமல் கொரோனாவை மேற்கோள் காட்டி சூழ்நிலைக் கைதிகளாக்கத்தான் துடிக்கிறது.