கேரளாவில் தென்மேற்குப் பருவமழை துவங்கி கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில், அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன. தற்போது வரை 43 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளித்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்தினார்.
மேலும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து - உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் - மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிலச்சரிவில் பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கேரளா இடுக்கி நிலச்சரிவில் பலியானவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள். மீட்புப்பணி காட்சிகள் பதறவைக்கின்றன. இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வேளையில், நிவாரணம், மறுவாழ்வுக்கு கேரள அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.