பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இராணுவ உபகரணங்கள் இறக்குமதி தடை ஆணை அறிவிப்பை ஆரவாரமாக அறிவித்தது தேவையற்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 101 இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் தடையாணையை அறிவித்தார். இது இந்தியத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் எனவும், இதன் மூலம் இந்தியா, இராணுவ உபகரணங்கள் தயாரிப்பதில் தற்சார்பு அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பெரும் ஆரவாரத்துடன் இந்த அறிவிப்பைத் தொடங்கிய பாதுகாப்பு அமைச்சர் இறுதியில் ஒரு சின்ன சிணுங்கலாக அதை முடித்துக்கொண்டார் என அவர் கிண்டல் செய்துள்ளார்.
இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகம் மட்டுமே. எந்தவிதமான இறக்குமதி தடை ஆணையும் தனக்கு தானே பாதுகாப்பு அமைச்சகம் விதித்துக்கொள்ளும் ஒன்றே.
அதனால் இந்த ஆரவாரமான அறிவிப்பு என்பதை அமைச்சரிடமிருந்து அவரது செயலர்களுக்கு அளிக்கப்படும் ஒரு அலுவல் சார்ந்த உத்தரவுடன் முடித்துக்கொண்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த இறக்குமதி தடை ஆணை என்பது ஒரு சத்தமான பிதற்றல் மட்டுமே. 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் நாம் தற்போது இறக்குமதி செய்யும் இராணுவ உபகரணங்களை இந்தியாவுக்குள்ளேயே தயாரிக்க முயற்சி செய்து, அதன் பின் இறக்குமதியை முழுமையாக நிறுத்திவிடலாம் என்பதை மட்டுமே அது சுட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.