தி.மு.க கோரிக்கையைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை மீதான ஆய்வைத் தொடங்கியது நாடாளுமன்ற நிலைக்குழு. அறிவிக்கையைக் கைவிட வேண்டிய அவசியம் குறித்தும் அரசுக்கு பரிந்துரை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் மோடி அரசு பதவியேற்ற நாள் முதல் மக்கள் நலனுக்கான திட்டங்களை மேற்கொள்வதற்கு பதிலாக கார்ப்பரேட் நலனுக்கான திட்டங்களையே அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கு நாடெங்கும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
அவ்வகையில் அண்மைக்காலங்களாக சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிவிக்கை மீதான விவாதங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த வரைவு அறிவிக்கை சட்டமாக இயற்றப்பட்டால் நாட்டின் இயற்கை வளத்துக்கு மாபெரும் கேடு விளையும் என தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தி.மு.க மாநிலங்களவைத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கையத் தொடர்ந்து இந்த கூட்டம் கூட்டப்பட்டது.
12 எம்.பிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை எம்.பி.கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தளர்வுகளை அனுமதித்தால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் தெரிவித்தனர்.
அறிவிக்கையின் இந்தி மொழிபெயர்ப்பு நகல்கள் கூட கிடைக்கவில்லை என்று வடமாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.கள் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அடுத்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சுற்றுச்சூழல் அறிவிக்கையின் பாதிப்பு குறித்தும், கைவிட வேண்டிய அவசியம் குறித்தும் அரசுக்கு பரிந்துரை வழங்கவும் நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.