அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. சுமார் நான்கு லட்சம் மக்கட்தொகை கொண்ட அந்தமானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அந்தமானில் இதுவரை 1,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில், 355 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். ஒரு வாரத்தில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மொத்த யூனியன் பிரதேசத்திலும் ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மேலும், மருத்துவமனைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இதுவரை 1 மில்லியன் மக்களுக்கு 60,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தமான் தலைமை செயலாளர் சேத்தன் சங்கி தெரிவித்துள்ளார். அந்தமானின் மொத்த மக்கள்தொகையே 4 லட்சம்தான் எனும்போது சுமார் 24,000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்தமானில் ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் தான் கொரோனா பரவியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்காமல் டெல்லிக்குச் சென்று திரும்பி வந்தநிலையில் அவர் மூலம் 2 உயரதிகாரிகளுக்கும், அதன் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், கமிஷனர் அலுவலகத்தைச் சேர்ந்த பியூன்களும், ஓட்டுநர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவக் காரணமான உயரதிகாரிகள் தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருந்தாலும் அந்தமானில் கொரோனா பரவி பொதுமக்கள் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.