மயிலாடுதுறை மணல்மேடு அருகேயுள்ள வரதம்பட்டு ஊராட்சி திருவாளப்புத்தூர் பகுதியில் வசித்து வந்த துப்புரவு தொழிலாளி ஒருவரின் கடைசி மகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டுள்ளார்.
மணல்மேடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக இருந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வரதம்பட்டு ஊராட்சியில் வேலை செய்ய வந்துள்ளனர். சிறுமியின் தந்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாயும், சிறுமியும் வீடு இல்லாததால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே உள்ள மின்மோட்டார் அறையிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் வேலையை சிறுமியின் தாயார் மாரியம்மாள் செய்துவந்துள்ளார். அவர் வராத நாட்களில் சிறுமி சென்று சுத்தம் செய்வது வழக்கமாக இருந்த நிலையில், சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளார் செந்தில்குமார்.
இந்நிலையில் செந்தில் குமார் முன்னணி ரசிகர் மற்றத்தின் நிர்வாகியாக இருப்பதால், அவனது நண்பர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் என பலரையும் கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
சிறுமியின் தாயார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த தொப்பையன் என்கிற முதியவர் ராதாகிருஷ்ணன், கடலங்குடியைச் சேர்ந்த ராஜ் ஆகியோரும் சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கர்ப்பமடைந்த சிறுமிக்கு கடந்த ஜூலை 22 அன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் விசாரித்ததில், சிறுமியின் அக்கா கணவருக்கு, இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுத்துள்ளதாகவும் அதில் கர்ப்பமாகி குழந்தை பிறந்தது என சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.
தாயார் அளித்த வாக்குமூலத்தின் படி, குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் அக்கா கணவரான வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்து, சிறுமியின் தாயார் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ரசிகர் மன்ற நிர்வாகி செந்தில்குமார், முதியவர் ராதாகிருஷ்ணன், ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமாரை உரிய முறையில் விசாரித்தால் இன்னும் பலர் சிக்குவர் என்றும், காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
எனவே உடனடியாக இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தையே உலுக்கியுள்ள இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்குமா? 14 வயது சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யுமா என பெண்கள் நல அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.