சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் மும்பை காவல்துறைக்கும் பீகார் காவல்துறைக்கும் இடையே உரசல் அதிகமாகியுள்ளது. பீகாரிலிருந்து மும்பைக்கு அனுப்பப்பட்ட உயர் காவல்துறை அதிகாரி ஒருவரை மும்பை அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியிருப்பதாக பீகார் காவல்துறைத் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் அதே வேளையில், பீகார் காவல்துறையினரும் பாட்னாவிலிருந்து கிளம்பிச் சென்று மும்பையில் முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த இரண்டு தரப்புக்கும் இடையே உரசல் இருந்துவந்த நிலையில், தற்போது பீகார் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரை மும்பை நிர்வாகம் கட்டாயப்படுத்தித் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அந்த அதிகாரிக்கு என்ன நடந்திருந்தாலும் அது சரியானது அல்ல.மேலும் பீகார் காவல்துறை அதனுடைய கடமையைத்தான் செய்கிறது என்றும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் நித்திஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பீகார் காவல்துறையின் தலைவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பீகாரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி மும்பை அரசு அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவரை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்கப்போவதாக அவரின் கையில் இடப்பட்டுள்ள முத்திரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகமும் திவாரி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டே மகாராஷ்டிரா டி.ஜி.பியை தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இரு மாநில போலிஸார் இதுபோல மோதிக்கொள்வதால் சுஷாந்த் சிங் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி இருப்பதாக சினிமா துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.