நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்வ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு எதிராக புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் டெல்லிக்கு அருகே உள்ள குர்கான் பகுதியில் இருந்து ட்ரக் ஒன்றினை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்ற கும்பல் ஒன்று, அந்த ட்ரக்கில் மாட்டிறைச்சி கடத்திச் செல்வதாகக் கூறி ட்ரக் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் நடந்த இந்த தாக்குதல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த போலிஸார் அதனை தடுக்கவோ இல்லை விசாரிக்கவோ எந்த முனைப்பும் காட்டாமல் இருந்துள்ளது.
மேலும், குண்டர்கள் அந்த ஓட்டுநரை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது தொடர்பான வீடியோக்கள் ஆதாரமாக இருந்தும் கூட போலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு அந்த ஓட்டுநரை பாட்ஷாபூர் என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்ற குண்டர்கள் அங்கு வைத்தும் தங்களது தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்கள்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அப்பகுதி போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்னதாக, 2015ம் ஆண்டு நொய்டா அருகே தாத்ரியில் இதேப்போன்று மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி ஒரு நபரை பசு காவலர்கள் பெயரிலான கும்பல் அடித்தேக் கொன்றது குறிப்பிடத்தக்கது.