கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கையின் மீது அரசு இதழில் அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 வரைவு, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக நடிகர் கார்த்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நடிகரும், உழவன் அறக்கட்டளை நிறுவனருமான கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு : குறள் 739.
பொருள் : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”
மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.
ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.” என அவரது அறிக்கை நீள்கிறது.
இன்று கார்த்தியின் அறிக்கையை பகிர்ந்த அவரது அண்ணனும் நடிகருமான சூர்யா, “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. ” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.