மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதனால் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு, அகில இந்திய கோட்டாவில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இந்த தீர்ப்பினால், தமிழகம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்கள் பயனடைவார்கள். OBC பிரிவினரைத் தாண்டி தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி மாணவர்களும் இதில் பயனடைகின்றனர்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மொத்தம் 19% ( எஸ்.சி 18%, எஸ்.டி 1%). ஆனால் மத்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி 15% மற்றும் எஸ்.டி 7.5% வழங்கப்படுகிறது.
தமிழக இடஒதுக்கீட்டு அளவோடு வைத்து பார்த்தால் எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு கொடுக்கும் இட ஒதுக்கீட்டில் 3% குறைகிறது. அதே நேரம் 1% மட்டுமே உள்ள எஸ்.டி பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுக்கிறது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட எஸ்.சி பிரிவினருக்கு குறைவாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட எஸ்.டி பிரிவினருக்கு அதிகமாகவும் இடஒதுக்கீடு கொடுக்கிறது.
மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பின் சாரம் கூறுவதால், OBC பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கிடைத்துவிடுகிறது. அதே போல் மாநில அளவுபடி, எஸ்.சி பிரிவினருக்கும் 18% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றுவிடுகிறோம். அதாவது 3% கூடுதல் இடங்கள். ஆகையால் இந்த வழக்கு OBC பிரிவினருக்கானது மட்டும் அல்ல எஸ்.சி பிரிவினருக்கும் சேர்த்தே பயனளிக்கக் கூடியதாக உள்ளது.