கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று தொடங்கிப் பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு சட்டத்தின் , வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் மீதான கருத்துக்கள் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் தெரிவிக்கப்படவேண்டும் எனவும் அந்த அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகத் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் தொடங்கும் முன்பாக சில ஒப்புதல்களை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் பெறவேண்டும். அதாவது அந்த குறிப்பிட்ட பணி எந்த அளவுக்குச் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற மதிப்பீடு நடத்தப்பட்ட பின்னரே அப்பணி தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படவேண்டும். அதன் பின்னரே ஒரு குறிப்பிட்ட பணியை அரசோ, தனியார் நிறுவனமோ தொடங்கமுடியும்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த வரைவு அறிக்கையின் படி ஒப்புதல்கள் வாங்கப்படாமலே வேலையைத் தொடங்குவதற்கான சாத்தியத்தை இச்சட்டம் ஏற்படுத்தித் தரும். மேலும் பணியைத் தொடங்கிய பின் ஒப்புதல் பெறுவது போன்ற ஒரு வாய்ப்பையும் இது ஏற்படுத்தித் தருகிறது. அதாவது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய பின் அத்திட்டம் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடு செய்வது. இது போன்ற பல குழப்பமான விஷயங்கள் இந்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இதற்குப் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மாணவ அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
மேலும் ஸ்கிராப் இஐஏ#ScrapEIA2020 என்ற ஹேஷ்டாக், தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தியுள்ளதை பயன்படுத்தி, (EIA2020) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா போன்ற மிகப்பெரிய மாற்றங்களுடனான சட்டங்களை அமல்படுத்தும் வேலையில் இறங்குவது, மக்களுக்கு மத்திய அரசாங்கம் செய்யும் வஞ்சகமே.