நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் தொழில் செய்து வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஊரடங்கால் மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சாந்தாபாய் பவார் என்ற 85 வயது மூதாட்டி ஒருவர் வேலையை இழந்ததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.
ஆகவே சிறுவயதில் தனது தந்தை கற்றுத்தந்த சிலம்பக் கலையை வைத்து வாழ்வாதாரத்தை மீட்கும் பணியில் இருக்கிறார். அதன்படி, புனேவில் உள்ள சாலையில் சிலம்பம் சுற்றி மக்களிடம் அன்பளிப்புகளையும் பெற்றிருக்கிறார்.
மேலும் இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தனக்கு மட்டுமல்லாமல் சில ஆதரவற்றவர்களுக்கும் உதவி வருகிறார் மூதாட்டி சாந்தாபாய்.
இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலானதை அடுத்து பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சோனு சூட் ஆகியோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் சோனு சூட் ஏற்கெனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் இந்த மூதாட்டியின் விவரங்களையும் ட்விட்டரில் கேட்டுள்ள அவர், பெண்களின் தற்காப்புக்காக மூதாட்டியை வைத்து பயிற்சிப் பள்ளி தொடங்கி பயிற்றுவிக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ரித்தேஷ் தேஷ்முக்கும் பாட்டியை கண்டுபிடிக்க உதவுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது அந்த மூதாட்டியை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.