‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா குறித்து எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், அரசின் அறிவுறுத்தலை பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பின்பற்றாமல் தவறான தகவலை மக்கள் மத்தியில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பாபிஜி அப்பளம்' என்ற அப்பள பிராண்டை அறிமுகப்படுத்திப் பேசியுள்ள பா.ஜ.க அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கொரோனா வைரஸிற்கான ஆன்டிபாடிகளை உருவாக்க இந்த பிராண்ட் அப்பளம் உதவும் எனப் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார்.
பாபிஜி அப்பளத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையிலான வீடியோவில் பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், “ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் 'பாபிஜி அப்பளம்' என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க அரசுகளும், விஞ்ஞானிகளும் கடுமையாகப் போராடி வரும் நிலையில், அவற்றை அலட்சியப்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.