சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான மத்திய அரசின் புதிய வரைவு குறித்து விமர்சித்து வந்த சூழலியல் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020-ம் ஆண்டிற்கான வரைவை கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதியன்று வெளியிட்டது மத்திய பா.ஜ.க அரசு. மேலும், புதிய வரைவின் மீதான விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரியப்படுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது.
மத்திய அரசின் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-ம் ஆண்டு வரைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாக நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. தொழிற்சாலைகளின் மாசுபாடுகளிடமிருந்து இயற்கையைப் பாதுகாப்பதற்கான பல விதிமுறைகள் இந்த புதிய வரைவில் மழுங்கடிப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான புதிய வரைவு குறித்தும், அது ஏற்படுத்தவுள்ள சூழலியல் சீரழிவுகள் குறித்தும் விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த fridaysforfuture.in, letindiabreathe.in, thereisnoearthb.com ஆகிய இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க வரைவை விமர்சித்ததற்காக, மக்கள் மத்தியில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, இந்த சுற்றுச்சூழல் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய சூழலியல் சீர்கேடுகள் குறித்துப் பேசி புதிய வரைவை விமர்சித்ததற்காக கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இணையதளங்களை முடக்கிய மத்திய அரசுக்கு சூழலியலாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து LetIndiaBreathe அமைப்பைச் சேர்ந்த ஜெய பாலசந்திரன் தனியார் செய்தி தளத்திடம் பேசியபோது, “எங்கள் இணையதளத்தை ஏன் முடக்கினார்கள் என்பது குறித்து எந்த விளக்கத்தையும் NIXI கொடுக்கவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து NIXI தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், இந்த இணைய முடக்கம் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளோம்.
இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மட்டுமல்ல, வேடந்தாங்கல் சரணாலயம், டிபாங் பள்ளத்தாக்கு, மோலெம் தேசியப் பூங்கா பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சூழலியல் பிரச்னைகளுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். இனியும் குரல் கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.