உலகெங்கிலும் கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களாக மக்கள் படும் பெரும் துயரைச் சொல்லிமாளாது. மாநிலத்தின் முதல்வர் வெ.நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் இரவு பகல் பாராது மக்கள் துயர் துடைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 75 நாட்களுக்குப் பிறகு கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்த கவர்னர் கிரண்பேடி, ஆய்வு என்ற பெயரில் நடந்துகொள்ளும் விதம் புதுச்சேரி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கவர்னர் கிரண்பேடி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த தினந்தோறும் வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் ஆடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அரசு அதிகாரிகள், போலிஸார், டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி, சுகாதாரத்துறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் இருந்து துணை இயக்குநர் ரகுநாத்திடம் சராமாரியாக கேள்வி எழுப்பினார். இது சுகாதாரத்துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இரவு பகலாக வேலை செய்யும் சுகாதாரத்துறையிடம் கவர்னர் கிரண்பேடி நடந்துகொண்ட விதத்திற்கு, அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் என அனைவரும், கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலையும் மருத்துவ ஊழியர்களின் போராட்டம் புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் தெரிவித்தாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றனர். இச்சமயத்தில் கடந்த 18ம் தேதி கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று கொரோனா விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அதிகாரிகளை சரமாரியாகத் திட்டினார்.
கொரோனா காலத்தில் உயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அவமானப்படுத்தும் விதமாக அவருடைய பேச்சு இருந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் மனசுமையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது எனக் குறிப்பிட்டனர். போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டது.
இதனிடையே புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று வரும் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றாமல் கவர்னர் கிரண்பேடி புறக்கணித்திருந்தார். தன் அனுமதி பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அரசு ஊழியருக்கான சம்பளம், ஓய்வூதியம் வழங்குவது அடுத்தமாதம் முதல் பாதிக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்து ஆடியோ பதிவு வெளியிட்டிருப்பது அரசு ஊழியர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் கிரண்பேடிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மக்களின் உரிமையை பறிக்கும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்கப்போவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி கூறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இது இப்படியிருக்க, கவர்னர் கிரண்பேடியின் அதிகார வேட்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் ஏற்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து பல்வேறு துறையின் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். இது புதுச்சேரி அரசுத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.