உத்தர பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளரான விக்ரம் ஜோஷி தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மகள்களுடன் காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த தாக்குதலின்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விக்ரம் ஜோஷியை நோக்கிச் சுட்டனர்.
இதில் விக்ரம் ஜோஷியின் தலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். இதனையடுத்து தாக்குதல் நடந்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சி.சி.டி.வி-யில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக, சில ஆண்கள் தனது மருமகளுடன் தவறாக நடந்து கொண்டதாக விக்ரம் ஜோஷி விஜய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் காரணமாக தற்போது தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக விக்ரம் ஜோஷியின் சகோதரர் அனிகேத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு பாதுக்காப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வரும் வேளையில் விக்ரம் ஜோஷி படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.