கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனே கர்ப்பிணியை, அவரது குடும்பத்தினர் வாணி விலாஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு படுக்கை வசதி இல்லை என்று கூறி கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை.
பின்னர் விக்டோரியா, ஸ்ரீராமபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றும் அங்கு கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு, 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணியை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கும் படுக்கை வசதி இல்லை என்று கூறி கர்ப்பிணியை அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்னர் மல்லேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே கர்ப்பிணியை ஆட்டோவில் குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஓடும் ஆட்டோவிலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
உடனடியாக தாயையும், குழந்தையையும் மல்லேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. இதனால் அந்த பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
சரியான நேரத்தில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை இறந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.