கர்நாடகாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், விஜயபுரா என்ற மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் ஆதிக்கசாதி கும்பலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்துள்ளது. மினாஜி என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவர் சாலையில் இருந்த இருசக்கர வாகனத்தை தற்செயலாக தொட்டிருக்கிறார். இதனைக் கண்ட ஆதிக்கசாதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி காண்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆளான தலித் நபர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
அதன்படி, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி அனுபம் அகர்வால் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையிலும் இதுபோன்ற சாதிய தாக்குதல்கள் நடைபெற்று வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.