கொரோனா பரிசோதனைகளை குறைத்து, இறப்புகளை மறைத்து மத்திய மோடி அரசு தவறான புள்ளி விவரங்களை வெளியிடுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பது மர்மமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதனை பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 அம்சங்களை குறிப்பிட்டு மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில், “மத்திய பாஜக அரசு பொய்களையே நிறுவனமயமாக்கியுள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைத்திருப்பதுடன், வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் விவரங்களை மறைத்து தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
புதிய கணக்கீட்டு முறையை பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதிலும் சீன ஆக்கிரமிப்பு விவகாரத்திலும் ஊடகங்களை அச்சுறுத்தி பொய்யான தகவல்களை அளித்து வருகிறது. இந்த மாயை விரைவில் உடைந்து அதற்கான விலையை இந்தியா கொடுக்கும்.” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக லடாக் எல்லைப் பகுதிக்குச் சென்றிருந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் “இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை தொடுவதற்கு கூட யாருக்கும் சக்தியில்லை. சீனாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” என பேசியிருந்தார்.
அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, “ நம்முடைய நிலத்தை சீனா பறித்துள்ளது. ஆனால் பாஜக அரசோ பிரபுக்களை போன்று சொகுசாக உள்ளது. இது சீனாவுக்கே பெரும் சாதகமாக அமையும். அரசின் இந்த கோழைத்தனமான முடிவுக்கு மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி வரும்.” என விமர்சித்திருந்தார்.