மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராம்குமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ராம்குமார் நீண்ட நாட்களாக காலியாக இருந்த புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்துள்ளார்.
இதனிடையே, எந்த வித முன் அறிப்பும் இன்றி அந்த இடத்தைக் காலி செய்ய கோரி போலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம்குமார் மற்றும் அவரது மனைவி சிறுது காலத்திற்கு அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத போலிஸார் நிலத்தில் இறங்கி விளைபயிர்களை அழித்தனர். இதனால் மனமுடைந்த ராம்குமார் மற்றும் அவரது மனைவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனிடையே பயிர்களை அழித்துக்கொண்ட போலிஸார் திடீரென விவசாயி குடும்பத்தைக் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே ராம்குமார் மயக்கம் அடைந்தார். மேலும், போலிஸார் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள ராகுல் காந்தி, “இந்த அநீதி எங்கள் சிந்தனை எதிரானது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நிலத்தை ஆக்கிரமித்து இருந்தாலும் சட்டப்படி நடந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக காவலர்கள் தாக்கியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.