மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் வங்கிக்குள் நுழைந்து 30 விநாடிகளில் ரூபாய் 10 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நீமுஜ் மாவட்டம் ஜாவத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பட்டப் பகலில் 10 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக சி.சி.டி.வியை ஆய்வு செய்ததில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டது 10 வயது சிறுவன் என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம். பரபரப்பாகச் செயல்பட்டுவந்த வங்கியில் கேஷியர் தன் அறையைப் பூட்டாமல், அருகில் உள்ள மற்றொரு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது அறைக்குள் புகுந்த 10 வயது சிறுவன், 10 லட்சம் ரூபாயை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஓடத் துவங்கியுள்ளான்.
உயரம் குறைவாக இருப்பதால் சிறுவன் வந்தது கூட அங்கு நின்ற வாடிக்கையாளர்களுக்குத் தெரியவில்லை. 30 விநாடிகளுக்குள் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வங்கி அலாரம் ஒலித்ததால், திருட்டு நடந்தது தெரியவந்தது.
மேலும், 20 வயது இளைஞர் ஒருவர் சிறுவனுடன் வந்திருந்ததும் கேஷியர் எழுந்து சென்றவுடன் சிறுவனுக்கு சிக்னல் கொடுத்து உள்ளே வரவைத்த காட்சிகளும் சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வங்கியில் கொள்ளையடித்த 10 லட்சம் ரூபாயுடன் மாயமான சிறுவனையும், கொள்ளையில் உதவிய இளைஞனையும், போலிஸார் தேடி வருகின்றனர்.