திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித்குமார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும் தூதரகத்தின் முன்னாள் ஊழியருமான ஸ்வப்னா சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். மாநில அரசின் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த கடத்தல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.
இதனை அடுத்து விசாரணயைத் துவங்கிய தேசிய புலனாய்வு அமைப்பினர், 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரள தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை சேகரித்து வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். iஇந்த விவகாரம் கேரள மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.