உத்தர பிரதேச மாநிலத்தில், போலிஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்படக் காரணமான ரவுடி விகாஸ் துபே போலிஸாரால் திட்டமிட்டு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்ச்சை உருவாகியுள்ளது.
பா.ஜ.க தலைமையில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்குவந்த பின் நடைபெறும் 119 வது என்கவுண்டர் இது என்று கூறப்படுகிறது. இதில் 74 என்கவுண்டர் கொலை வழக்குகளிலும் போலிஸார் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் என்கவுண்டர் கொலைகள் குறித்து விசாரிக்க பி.யூ.சி.எல் உள்ளிட்ட மூன்று மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் அனூப் பிரகாஷ் அஸ்வதி தாக்கல் செய்துள்ள மனுவில், உத்தர பிரதேச மாநில காவல்துறை துப்பாக்கிகள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றங்கள் மீதும், நீதி பரிபாலன அமைப்புகளையும் அவர்கள் மதிப்பதில்லை. நீதிமன்றங்களை மூடிவிடலாமா என்று கேட்கும் அளவுக்கு காவல்துறை சட்ட மீறல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எட்டு போலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலிஸ், அரசியல்வாதிகள் தொடர்புகளும் உள்ளன எனவே சி.பி.ஐ பிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுள்ளது.
மேலும் அதில், பி.யூ.சி.எல் தாக்கல் செய்துள்ள மனுவில் என்கவுண்டர் கொலைகளில் போலிஸார் கூறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து என்கவுண்டர் கொலைகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது 2017 ஜனவரி முதல் நடைபெற்ற என்கவுண்டர் கொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தாக்கல் செய்துள்ள மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பி.யூ.சி.எல் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.