இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் மற்றும் நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது.
இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு இதர பிற்படுத்தப்பட்டோரில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமானத்தை கணக்கிடுவதற்கான அம்சங்கள் குறித்து தெளிவான பரிந்துரைகளை வழங்கியது.
முக்கியமாக, அதில் வருமான வரம்பை கணக்கிடும்போது, மாதாந்திர ஊதியத்தையும், நில வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு, அரசாணை வெளியிட்டு, கடந்த பல ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போதைய மத்திய பா.ஜ.க அரசு, அவர்களின் சித்தாந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டு கோட்பாட்டை படிப்படியாக சிதைப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை அமலாக்கி வந்திருக்கிற வருமான வரம்பு கோட்பாட்டை மாற்றியமைத்திட தீர்மானித்துள்ளது. அதாவது, வருமான வரம்பை தீர்மானிப்பதில் மாதாந்திர ஊதியம் மற்றும் நிலத்து வருமானத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென தற்போது முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற நிலைக்குழுவும் மத்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிசன், தற்போது ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பதற்கு மத்திய அரசின் நிர்ப்பந்தமே காரணம் என ஐயம் எழுகிறது.
இவ்வாறு மாதாந்திர ஊதியத்தையும், நில வருவாயையும் வருமான வரம்பு தீர்மானிப்பதில் சேர்த்து கணக்கிட்டால், தற்போது இடஒதுக்கீடு பெறும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பலர், அதனைப் பெற முடியாத நிலைமை ஏற்படும். அரசின் மேற்கண்ட முடிவு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார அடிப்படையை நீர்த்துப் போகச் செய்து விடும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வஞ்சிக்கப்படும் நிலை உருவாகும்.
நாடு முழுவதும் கோவிட் 19 நோய்த் தொற்றினாலும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினாலும் இந்திய நாட்டு மக்கள் குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறு-குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல கோடி தொழிலாளர்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு எனத் துயருற்றிருக்கும் நிலையில், இம்மக்களைப் பாதுகாத்திட பல நிவாரணத் திட்டங்களை நிறைவேற்றுவது பற்றி எள்ளளவும் மோடி அரசு கவலைப்படவில்லை. மாறாக, இட ஒதுக்கீட்டு கொள்கையினை நீர்த்துப்போகச் செய்வதில் மோடி அரசு அவசரம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
எனவே, மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் மற்றும் நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.