சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் வீடு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாதர் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீடு ‘ராத் கிருகா’ என அழைக்கப்படுகிறது.
1930ம் ஆண்டு மும்பையில் குடியேறிய போது, ராஜ் கிருஹா கட்டப்பட்டது. மூன்று தளம் கொண்ட இந்த வீட்டில் தரைதளத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் தனிப்பட்ட உடைமைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
மற்ற தளத்தில் அம்பேத்கரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அம்பேத்கர் வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள பூந்தொட்டிகள், சிசிடிவி கேமிராக்கள், ஜன்னல்கள் ஆகியவற்றை நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பரபரப்பானதை அடுத்து அம்பேத்கரின் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள், அவரை பின்பற்றுவோர்கள் என பலரும் குவிந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரின் சிலைகளை உடைப்பது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது அவரது இல்லத்தையும் தாக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அம்பேத்கரின் வீட்டை சேதப்படுத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அம்பேத்கரின் வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.