கொரோனா பாதிப்பு காலத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து மீண்டும் உபரி நிதியை அதிகளவில் பெற மத்திய மோடி அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடந்தாண்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசு பெற்றது. ஏற்கெனவே பெரும் சரிவில் இருந்து இந்திய பொருளாதாரம் கொரோனா பாதிப்பு காரணமாக அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் சீன அத்துமீறல் காரணமாக எல்லையில் ராணுவத்தை பலப்படுத்துவது போன்ற செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
ஆகையால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக உபரி வருவாயை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பொருளாதார நெருக்கடி நிலை, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு நிதி சிக்கல்களால் குழப்பத்தில் உள்ள ஆர்.பி.ஐ. உபரி வருவாயை அரசுக்கு வழங்குவது குறித்து யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கொரோனா ஊரடங்குக்காக கடன் பத்திரங்களை கொடுத்து மத்திய அரசு ஒரு லட்சத்துக்கு 3,000 கோடி ரூபாய் நிதியை வாங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது உபரி வருவாயை அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்குமா இல்லையா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.