லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் நம் நாட்டு ராணுவத்தினர் 20 பேர் இன்னுயிர் நீத்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பாஜக ஆதரவாளர்களோ சீன பொருட்களை அழித்து, எரித்து, நாசமாக்கி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்ததோடு, அவ்வாறான அவர்களின் எதிர்ப்புகளை சீனா நிறுவனம் தயாரித்த செல்போனிலேயே வீடியோ எடுத்து சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலியிலேயே அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தனர்.
இதனையடுத்து, நேற்று இரவு சீனாவைச் சேர்ந்த டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் போன்ற 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது பரபரப்பான நேரத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஊடுருவி அந்த பகுதி தன்னுடையது என சொந்தம் கொண்டாடி நமது ராணுவத்தினரை கொன்றுக் குவித்த சீனாவிற்கு வெறும் செயலிகளை தடை செய்வதுதான் பாஜக அரசின் அதிரடி எதிர்ப்பா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, 2014ம் ஆண்டுக்கு பிறகு சீன பொருட்கள் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது என்பதை விளக்கப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2008 முதல் 2014ம் ஆண்டு வரையில் அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சீன பொருட்களின் விகிதம் வெறும் 14 சதவிகிதமாகவே இருந்தது என்றும் 2014ம் ஆண்டுக்கு பிறகு இதுவரையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் போது 18 சதவிகிதத்துக்கும் அதிகமான சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உண்மைகள் எப்போதும் பொய் சொல்வதில்லை. Make in India என்று பேசி ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதையே நித்தமும் செய்து வருகிறது என ராகுல் காந்தி அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.