உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்னிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் மேலும் 29 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 647ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியின் உத்தரவின் பேரில் காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வசூல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கூட்டமாக நின்றிருந்தால் தலா ரூ.100 அபராதம் எனவும், மாஸ்க் போடாதவர்களுக்கு ரூ.200 எனவும் அபராதங்கள் விதிக்கப்பட்டுகின்றன. ஒவ்வொரு வீதிக்கும் முன்பாக போலிஸாரும், உள்ளாட்சித்துறை ஊழியர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
வாகனங்களில் வருவோரிடம் லைசென்ஸ் இல்லையா? நூறு ரூபாய் கொடு என்று கேட்டும் கட்டாய வசூல் நடந்து வருகிறது.
இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட வீடியோவை அடுத்து போலிஸாரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 4 லட்சரூபாய்க்கு மேல் அபராத பணம் குவிந்தும் இன்னும் போதவில்லை. டார்கெட்டை நிறைவேற்றுங்கள் என்று கவர்னர் கூறுவதால்தான் வசூலில் கெடுபிடி உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள டார்கெட் வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழக பகுதியில் இருந்துவந்த ஒரு லாரி ஓட்டுநரிடம், அவர் மாஸ்க் போட்டிருந்தும், சகலவிதமான சான்றிதழ்கள் வைத்திருந்தும், 100 ரூபாய் கொடுத்தால்தான் புதுச்சேரியில் அனுமதிக்கப்படுவீர்கள் என்று கூறி கட்டாய வசூல் நடந்துள்ளது. 100 ரூபாய் போலிஸாருடன் தண்டப்பணமாக கொடுத்துவிட்டு வந்த அந்த லாரி ஓட்டுநரிடம், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மீண்டும் சம்பந்தப்பட்ட மேட்டுப்பாளையம் காவல்துறையினர் அடாவடி வசூல் நடத்தி பணத்தை பிடுங்கியுள்ளனர்.
ஒரே நாளில் எத்தனை பேரிடம் அபராதம் செலுத்துவது என்றுகேட்ட அந்த லாரி ஓட்டுநரை, போலிஸார் கடுமையாக மிரட்டியுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று கூறியுள்ளனர். அவர் போலிஸ் அடிக்கு பயந்து தப்பித்துவந்து சமூக ஆர்வலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று, கவர்னரின் டார்கெட் டார்ச்சரை தாக்கு பிடிக்க முடியாமல், போலிஸார் வருவோர் போவோரை எல்லாம் மிரட்டி பணம் பிடுங்கத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள்முதல் இன்றுவரை தனது வயதையும் பொருட்படுத்தாமல் புதுச்சேரி முதல்வர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டும், உதவிகளை செய்தும் வருகிறார்.
ஆனால், கவர்னர் கிரண்பேடி கொரோனா தொற்று பரவி 75 நாட்கள் கழித்துதான் வெளியில் தலைகாட்டினார். தற்போது மக்களை மிரட்டி பணம் பிடுங்க போலிஸாருக்கு உத்தரவு போடுகிறார். போலிஸாரும், தன்னார்வலர்கள் எனப்படும் போலிஸ் நண்பர்கள் குழுவினரும் கையில் தடியுடன் பொதுமக்களை மிரட்டுவது தொடங்கியுள்ளது என்றுகூறும் சமூக ஆர்வலர்கள் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் மீது கொதிப்படைந்துள்ளனர்.