கொரோனா தொற்று பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கொரோனாவை குணப்படுத்த பிரத்யேக தடுப்பூசிகளோ மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ எனும் மருந்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்தார். அதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் ஃபேவிபிராவிர், ரெம்டெசிவிர் ஆகிய மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிலும் சந்தேகமான நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில், மிதமான மற்றும் தீவிர கொரோனா அறிகுறிகள் காணப்படும் நபர்களுக்கு, ‘டெக்சாமெத்தசோன்’ மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெக்சாமெத்தசோன், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என பிரிட்டனில் நடந்த பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், இறப்பு வீதம் 35 சதவீதம் குறைந்ததாக தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு கழக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மிதமான மற்றும் தீவிரமாக கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ‘டெக்சாமெத்தசோன்’ மருந்தை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.