இந்தியா

“அப்போ தனியார் வசம்... இப்போ மாநிலங்களுக்கு 50,000 வெண்டிலேட்டர்கள்” - PM Cares நிதியில் என்ன நடக்கிறது?

பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 50 ஆயிரம் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“அப்போ தனியார் வசம்... இப்போ மாநிலங்களுக்கு 50,000 வெண்டிலேட்டர்கள்” - PM Cares நிதியில் என்ன நடக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காகச் செலவிடும் அவசரகால நிதி என்று கூறி பி.எம்.கேர்ஸ் நிதியம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக பிரதம அமைச்சர் நரேந்திர மோடியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் உள்ளனர்.

பொதுமக்கள், அரசு ஊழியர்கள், இராணுவத்தினர், நிதித்துறையில் உள்ளவர்கள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் என்று பல மாநிலங்களிலிருந்தும் நிதி வழங்கி வருகிறார்கள். இதுவரையிலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் நிதி சேர்ந்துள்ளது.

இந்த பி.எம்.கேர்ஸ் நிதியை பொதுப் பயன்பாட்டுக்காக விடுவிக்காதது ஏன் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பி.எம்.கேர்ஸ் நிதியம் பொது நிறுவனம் அல்ல. அதற்கு வரும் நிதி மற்றும் செலவிடப்படும் நிதியை தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக மோடி அரசு மறுத்திருந்தது.

இதையடுத்து, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் பி.எம்.கேர்ஸ் நிதியை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விடுவியுங்கள் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல, பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொது நிறுவனமாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து செலவிடப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விவரங்களை மத்திய அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், 50 ஆயிரம் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் மாநிலங்களுக்கென 3,000 வென்ட்டிலேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,923 வென்ட்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு முதற்கட்டமாக 1,340 வென்ட்டிலேட்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜூன் இறுதிக்குள் மேலும் 14 ஆயிரம் வென்ட்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு 275ம், டெல்லிக்கு 275ம், குஜராத்துக்கு 175ம், பீகாருக்கு 100ம் வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக 1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மராட்டியத்துக்கு ரூ.181 கோடி, உத்தர பிரதேசத்துக்கு 103 கோடி, தமிழகத்துக்கு 83, குஜராத்துக்கு 66, டெல்லிக்கு 55, மேற்கு வங்கத்துக்கு 53, பீகாருக்கு 51, மத்திய பிரதேசத்துக்கு 50, ராஜஸ்தானுக்கு 50 மற்றும் கர்நாடகாவுக்கு 34 கோடி ரூபாய் என வழங்கப்பட்டிருக்கிறது.

இவை, 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 50 சதவிகிதமும், கொரோனா நோயாளிகளில் 40 சதவிகிதம் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் 10 சதவிகிதம் என்ற வகையில் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது என மத்திய அரசு தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பற்றி ஏதும் தெரிவிக்க முடியாது, அது தனியார் வசம் உள்ளது என கூறிவிட்டு தற்போது அதே நிதியத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, வென்ட்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகமே கூறியிருப்பது பெரும் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான நடைமுறையை பின்பற்றாமல் மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குவதன் அவசியம் என்ன எனவும் சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories