இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். சீன தரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதுதொடர்பாக சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிட வில்லை.
கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு ராணுவம் இடையே மோதிக்கொண்டு உயிர்பலியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த பிரச்சனை தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.
இதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துத் தொடர்பாக பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கடந்த ஜூன் 15- 16, 2020ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளனர்.
இதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது உயிர் தியாகம் வீண் போகக் கூடாது. இந்த சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இதன்மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர்.
நமது ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. பிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஏப்ரல் 2020ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது.
இந்த விஷயம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும். வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம்” எனத் தெரிவித்துள்ளார்.