இந்தியா

“VIVO தான் ஸ்பான்சர்” : உறுதி செய்த பிசிசிஐ - பா.ஜ.கவினர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷாவின் மகன்!

அமித்ஷாவின் மகன் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைப்பே சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பா.ஜ.க ஆதரவாளர்களின் பிரசாரம் கேலிக்குரியதாகி இருக்கிறது.

“VIVO தான் ஸ்பான்சர்” : உறுதி செய்த பிசிசிஐ - பா.ஜ.கவினர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷாவின் மகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பா.ஜ.க அமைச்சர்களும் இக்கருத்துக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இதன் உச்சமாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை இந்தியர்கள் உண்பதையும், தயாரிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் பேசினார்.

ஆனால், இந்திய சந்தைகளில் சீன தயாரிப்புகளின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால், இது உடனடியாக ஆகக்கூடிய காரியமல்ல என்றும், தேவையற்றது என்றும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க ஆதரவாளர்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் எனும் கோஷத்தோடு, சீன தயாரிப்புகளை உடைக்கும் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பணம் கொழிக்கும் ஐ.பி.எல் தொடரின் ஸ்பான்சராக சீன நிறுவனமான ‘Vivo' நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 'Vivo' ஸ்பான்சராக நீடிக்கும் என பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

“VIVO தான் ஸ்பான்சர்” : உறுதி செய்த பிசிசிஐ - பா.ஜ.கவினர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷாவின் மகன்!

இதுதொடர்பாகப் பேசியுள்ள அருண் துமால், “சீன நிறுவனங்களுக்கு உதவுதல் என்பதற்கும் சீன நிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. அதில் ஒரு பங்கை பிசிசிஐக்கு ஐ.பி.எல் ஸ்பான்சர்களாகச் செலுத்துகிறார்கள்.

அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பி.சி.சி.ஐ 42% வரி செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமானதுதானே தவிர சீனாவுக்குச் சாதகமானதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷாவின் மகன். அவர் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைப்பே சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பா.ஜ.க ஆதரவாளர்களின் ‘சீன தயாரிப்புகள் எதிர்ப்பு’ பிரசாரம் கேலிக்குரியதாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories