நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் இந்த இக்கட்டான சூழலில், மனிதம் உயிர்ப்புடன் இருக்கிறதா என கேள்வி எழும் வகையில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்துக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த நபரின் உடலை போலிஸார் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அன்வர் என்பவர், அரசு அலுவலகத்துக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்துள்ளது ஆம்புலன்ஸ்.
ஆனால், கொரோனா அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் ஊழியர் இறந்தவரின் உடலை தொடுவதற்கு பயந்துகொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து வந்த நகராட்சி ஊழியர்கள் சாலையோரத்தில் கிடந்த முகமது அன்வரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை போலிஸார் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இது தொடர்பான நிகழ்வை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது பரவியதை அடுத்து பல்ராம்பூர் காவல் ஆணையர் தேவ் ரஞ்சன் வெர்மா இது மனித தன்மையற்ற செயல் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து வீடியோவில் காணப்பட்ட இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.