கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கியுள்ளது. ஆகவே, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முதலில் மே மாதம் வரை அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மாத தவணை செலுத்துவதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது.
ஆனால், அந்த தவணைகளுக்கான வட்டியை செலுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கி விலக்களிக்கவில்லை. ஆகையால், டெல்லியைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் தவணைகளுக்கான வட்டியை வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பதிலளித்துள்ள ஆர்.பி.ஐ தரப்பு, வட்டி செலுத்துவதை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு 2.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது, நாட்டின் ஜிடிபியில் ஒரு சதவிகிதமாகும்.
மேலும், இந்த வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் நலனை காக்க முடியாமல் போகும். ஆகவே கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என கூறியுள்ளது.
அப்போது, மக்களின் சுகாதாரப் பிரச்னையை விட, பொருளாதாரப் பிரச்னையை பெரிதாக பார்க்கக் கூடாது என்றனர். மேலும், அவகாசம் வழங்கப்பட்டுள்ள கால அளவுக்குள் வட்டி வசூலிக்கப்படுமா? மாத தவணை கட்டாத மாதங்களுக்கு வேறு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நிதித்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.