கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மிகப்பெரிய தோல்வி என நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பா.ஜ.க அரசை குற்றஞ்சாட்டி இருந்தார்.
அதேபோல, காங்கிரஸ் சார்பில் ஸ்பீக் அப் இந்தியா என்ற பெயரில் எளிய மக்களின் நிலை, சிறு, குறு தொழில்களின் நிலைகுறித்து விவாதிக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு தீர்வுகளும், யோசனைகளும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 100ல் இருந்து 200 நாட்களாக உயர்த்துங்கள் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையான நிதிப் பற்றாக்குறையை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புலம்பெயர்ந்த தொழிலாளர்களோ நூற்றுக்கணக்கான கி.மீ தொலைவுக்கு கால்நடையாக படையெடுத்து, பசியாலும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கிறார்கள்.
அவர்களின் வேதனைகளும், வலிகளும் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் காதுகளிலும் ஒலித்து, இதயத்தைக் கனக்க வைத்துள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசுக்கு ஏனோ கேட்கவில்லை எனச் சாடியுள்ளார். அதேபோல, கோடிக்கணக்கான வேலையிழப்புகள் உண்டாகிவிட்டன. லட்சக்கணக்கான வர்த்தகங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
விளைபொருட்கள் அனைத்தும் சந்தையில் விற்கப்படாமல் வீணாகிப் போகின்றன. இந்திய தேசமே பெரும் துயரத்தில் உள்ளது அரசுக்கு ஏன் உறைக்கவில்லை என கேள்வி எழுப்பிய சோனியா காந்தி உடனடியாக இவற்றை சீரமைக்க கஜானாவை திறங்கள் என மோடி அரசை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஏழைக் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறு மாதங்களுக்கு ரூ.7,500 வழங்கிட வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊருக்குச் சென்றிட இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, நாட்டின் நலன் கருதி காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வரும் யோசனைகளை, வலியுறுத்தல்களை கேட்க செவிமடுக்காதது ஏன் எனவும் மத்திய பா.ஜ.க அரசுக்கு சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.