கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர்.
இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுக்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஜெயராம் ஊரடங்கு உத்தரவை மீறி தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்த அடுத்த வாரத்திலேயே கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா, சமூக விலகலைக் கடைபிடிக்காமல் சுகாதாரப் பணியாளர்கள் ரேஷன் பொருள்களை வழங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
தொடர்ந்து பா.ஜ.கவினர் ஊடரடங்கை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஸ்ரீராமுலு பங்கேற்ற விழாவில், பெருங்கூட்டமாக பா.ஜ.க-வினர் கலந்து கொண்டு, அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் களை கௌரவிக்கிறோம் என்ற பெயரில் விழாவை நடத்தி, அந்தவிழாவில்தான் விதிகளை மீறியுள்ளனர். ஊரடங்கை மறந்துவிட்டு, ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.
தனிமனித இடைவெளி, முகக்கவசம் எதையும் பின்பற்றவில்லை. இவ்வாறு ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு இருப்பதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாவிட்டால், குறைந்தது ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள், ஊரடங்கை மீறுபவர்கள் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை மீறி பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதுப்போல விதிமீறலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.