கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பல்வேறு துறை வல்லுநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடி வருகிறார்.
அந்த வரிசையில் இன்று, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜீவ் பஜாஜூடன் காணொளிக் காட்சி மூலமாக உரையாடினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது.
உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறுவது இதனால்தான். உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில்லை. இது ஒரு மிகப்பெரிய பேரழிவு.
கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில முதலமைச்சர்களை முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு ஒரு செயற்பாட்டாளராகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தடுப்பு முயற்சியில் தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. இப்போது பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப் பார்க்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் பஜாஜ் பேசுகையில், “இந்தியா ஊரடங்கை கையாண்ட விதம் அடக்குமுறை ரீதியிலானது. அரசு தொற்று பரவலைத் தீர்க்கவில்லை. அதற்குப் பதிலாக பொருளாதாரத்தை அழித்துவிட்டது. வைரஸை மட்டுப்படுத்துவதற்குப் பதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அரசு முடக்கிவிட்டது.
மக்கள் பிரதமரை பின்தொடர்கிறார்கள். எனவே, மக்களின் மனதில் இருந்து பயத்தை போக்க பிரதமர் முயற்சித்திருக்க வேண்டும்.பிரதமர் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.