இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்ட நான்கு கட்ட ஊரடங்கு முழுவதும் தோல்வியடைந்த நடவடிக்கை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அண்மையில் கடுமையாக மோடி அரசை குற்றஞ்சாட்டி இருந்தார்.
அதன்படி, நான்கு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. 2.16 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதே மிச்சம். நாள்தோறும் பல்லாயிரம் கணக்கில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னையும் முடிந்தபாடில்லை.
கிட்டதட்ட, மார்ச் 25ம் தேதி நாட்டின் சாலை வழியாக நடக்க தொடங்கிய தொழிலாளர்கள் இன்றளவும் அந்த படையெடுப்பை நிறுத்தவில்லை. அரசும் முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவில்லை. ஷ்ராமிக் சேவையை தொடங்கியிருந்தாலும் அது அனைவருக்கும் பயன்படும் வகையிலும் இல்லை.
ஆகையால், வெயிலில் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்தே செல்லும் கொடூரம் தொடர்ந்து வருகிறது. இதனால், கடந்த 2 மாதங்களில் 224 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு வகையில் உயிரிழந்திருக்கிறார்கள். விபத்துகளில் சிக்கியும், உணவு இல்லாமல் சோர்வடைந்தும் உயிரைவிடுகின்றனர்.
இதில், முதன்மையாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகபடியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 94 பேர், மத்திய பிரதேசத்தில் 38 பேர், பீகாரில் 16 பேர், தெலங்கானாவில் 11 பேர், மகராஷ்டிராவில் 9 பேர் என 168 பேர் சாலை விபத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதேபோல, மூன்றாம்கட்ட ஊரடங்கின் போது 60 சதவிகித புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், நான்காம் கட்ட ஊரடங்கின் போது 16 சதவிகித தொழிலாளர்களும் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதில், 3ம் கட்ட ஊரடங்கின் போது மட்டும் 118 பேரும், ஒன்று, இரண்டு மற்றும் 4ம் கட்ட ஊரடங்குகளின் போது 25, 17 மற்றும் 38 என முறையே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும், மார்ச் 25 முதல் மே 31ம் தேதி வரையிலான தேசிய ஊரடங்கின் போது ஆயிரத்து 461 சாலை விபத்துகள் நடந்திருப்பதாகவும், அதில் உயிரிழந்த 750 பேரில் 198 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று SaveLIFE Foundation என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.